உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீடு ஒப்படைக்க தாமதித்த நிறுவனம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

வீடு ஒப்படைக்க தாமதித்த நிறுவனம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சென்னை, சென்னை தாம்பரத்தை அடுத்த புது பெருங்களத்துார், ஆலப்பாக்கம், புதுார் சாலையில், எஸ்.எஸ்.எம்., பில்டர்ஸ் நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் வீடு வாங்க, பத்மநாபன், பாஸ்கரன் ஆகியோர் தனித்தனியாக, 2013ல் ஒப்பந்தம் செய்தனர். இதற்கான விலையை பல்வேறு தவணைகளாக செலுத்தினர். ஒப்பந்தத்தின்படி, 2016ல் வீடு ஒப்படைக்கப்படும் என, கட்டுமான நிறுவனம் தெரிவித்து இருந்தது. ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் அந்நிறுவனம் வீட்டை கட்டி முடிக்காததால், பணம் செலுத்தியவர்களுக்கு குறித்தகாலத்தில் வீடு கிடைக்கவில்லை. இதுகுறித்து, எஸ், பத்மநாபன், ஆர். பாஸ்கரன் ஆகியோர் தனித்தனியாக ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் செய்தனர். புகார்கள் தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் என்.உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு: கட்டுமான நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்கவில்லை; இரண்டு ஆண்டுகள் கழித்துதான் வீடு கிடைத்துள்ளது. தாமத கால பாதிப்புகளுக்கு இழப்பீடு பெற, மனுதாரர்களுக்கு தகுதி உண்டு. பத்மநாபனுக்கு தாமதத்திற்கான இழப்பீடாக, 12.80 லட்சம் ரூபாய், மன உளைச்சலுக்கான இழப்பீடாக, 5 லட்ச ரூபாய், வழக்கு செலவுக்காக, 1 லட்ச ரூபாயை கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும். மற்றொரு மனுதாரர் பாஸ்கரனுக்கு, தாமத கால இழப்பீடாக, 9.18 லட்ச ரூபாய், மன உளைச்சலுக்கான இழப்பீடாக, 5 லட்ச ரூபாய், வழக்கு செலவுக்காக, 1 லட்ச ரூபாயை கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும். உத்தரவு பிறப்பித்த நாளில் இருந்து, 90 நாட்களுக்குள் இழப்பீட்டை கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை