மறைமலை நகர் : செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மற்றும் குறைதீர் கூட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, உள்ளாட்சி பிரதிகளிடம் கோரிக்கை மனுக்களை, நேற்று முன்தினம் பெற்றார்.இதில், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கருநிலம் ஊராட்சி பிரதிநிதிகள், அமைச்சர் அன்பரசனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவின் விபரம்:கருநிலம் ஊராட்சியின் பக்கத்து எல்லையில் அமைந்துள்ள சிறுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட மருதேரி கிராமத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரியில் மண் அள்ள அரசு அனுமதியளித்துள்ளது.அதன் காரணமாக, அதி கனரக வாகனங்கள் வாயிலாக, 80 டன் அளவிற்கு, அனுமதியளிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மண் ஏற்றிக்கொண்டு, எங்கள் கிராமம் வழியாக செல்வதால், 2 கி.மீ., துாரம் சாலை சேதமடைந்து உள்ளது. லாரிகள் மேலே தார்பாய் மூடாமல் செல்வதால், சக வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.இந்த சாலை குறுகலான சாலை என்பதால், காலை மற்றும் மாலை நேரங்களில், பள்ளி குழந்தைகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தொடர்ந்து, லாரிகள் செல்வதால் கிராம மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. ஏரியில் அனுமதித்த அளவை விட, அதிக ஆழம் எடுப்பதால், தண்ணீர் குடிக்க செல்லும் கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.லாரிகளின் வருகையை கட்டுப்படுத்தாவிடில், போராட்டம் நடத்தவும் கிராம மக்கள் முடிவு செய்து உள்ளனர். எனவே, அமைச்சர் தலையிட்டு, உடனடியாக இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.