மதுராந்தகம், : மதுராந்தகத்தில் ஏரி காத்த ராமர் என அழைக்கப்படும், கோதண்டராமர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், இக்கோவில் செயல்பட்டு வருகிறது.இத்திருத்தலத்தில், உலகில் வேறெங்கும் காண முடியாத மூலவர் சன்னிதியில் ராமர், சீதையை கைப்பற்றியவாறு திருமணக்கோலத்தில் அமைந்திருப்பது சிறப்பு.இக்கோவிலில், தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெற்று வந்தது. இந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, கடந்த ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு, கண்ணாடி அறைக்குள் சுவாமி வைக்கப்பட்டுள்ளது.தற்போது, உபயதாரர்கள் நிதியின் வாயிலாக, தேரின் விஸ்தார மேல்மட்ட கொடுங்கை, ரூபாய் 75 லட்சம் மதிப்பில் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.தேரின் அடிபீடம் 15 அடி மற்றும் விஸ்தார மேல்மட்ட கொடுங்கையுடன் சேர்த்து, 52 அடியில், தேர் முழுவதும் மரத்தால் வடிவமைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், மேல்மட்ட கொடுங்கை அமைக்கும் பணிக்காக, தேரின் அடிபீடத்தை சுற்றி, மண் துாசு மற்றும் வெயில், மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில், பச்சை வண்ண துணியால் மறைப்பு ஏற்படுத்தப்பட்டது.சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, அந்த துணிகள் கிழிந்து வீணாகின. அதனால், தேரின் அடிபாகத்தில், சிறிய அளவிலான மர சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட மர சிற்பங்கள், மழையில் நனைந்து வீணாகி வருகின்றன.மேலும், திறந்தவெளியில் தேர் காட்சியளிக்கிறது. எனவே, தேரினை சுற்றி, தென்னங்கீற்றால் கொட்டகை அமைக்க வேண்டுமென, நமது நாளிதழில் செய்தி வெளியானது.இதனை அடுத்து, தேரின் மேல்மட்ட கொடுங்கை, மழையில் நனையாதவாறு பாலீத்தின் தார்பாய்கள் கொண்டு, முழுதுமாக மூடி பாதுகாக்கப்பட்டது.