காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல், 1,417 ஓட்டுச்சாவடிகளில் நேற்று நடந்தது. தேர்தலில் பயன்படுத்த உள்ள ஓட்டுச்சாவடிகள், முன்கூட்டியே முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை, பெல் நிறுவன பொறியாளர்கள் செய்தனர். மேலும், வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணியின்போதும், இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. இருப்பினும், லோக்சபா தேர்தல் நடந்த நேற்று பல ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கோளாறு செய்ததால், ஓட்டுப்பதிவு சற்று தாமதமாகியுள்ளது.வாலாஜாபாத் அடுத்த, கிதிரிப்பேட்டை கிராமத்தில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடியிலும், காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பசுமை ஓட்டுச்சாவடியிலும், காஞ்சிபுரம் அருகேயுள்ள திருப்பருத்திக்குன்றம் ஓட்டுச்சாவடி, காஞ்சிபுரம் மாநகராட்சியில் உப்பேரிக்குளம் மாநகராட்சி பள்ளியிலும், ஏகாம்பரநாதர் கோவில் அருகேயுள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், மேல்ஒட்டிவாக்கம் கிராம ஓட்டுச்சாவடி என, 6 ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக, ஓட்டுப்பதிவு நேற்று காலை சற்று தாமதமாகின.இயந்திரத்திலிருந்து சத்தம் வரவில்லை எனவும், இயந்திரம் இயங்கவில்லை எனவும் பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டன. பெல் நிறுவன பொறியாளர்கள், ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று அவற்றை சரிபார்த்த பின், ஓட்டுப்பதிவு பிரச்னையின்றி நடந்தது.காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில், நடுத்தெருவில் அமைந்த ஓட்டுச்சாவடியில், அ.தி.மு.க., - -தி.மு.க., கட்சியினரிடையே நேற்று காலை வாக்குவாதம் ஏற்பட்டது. இரு கட்சி நிர்வாகிகள் மத்தியில் கைகலப்பு ஏற்பட்டதால், சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதானம் செய்தனர். இதனால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு காணப்பட்டது.அதேபோல, காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் செயல்பட்ட ஓட்டுச்சாவடி முன்பாக, வாக்காளர்களிடம் பிரசாரம் செய்த அரசியல் கட்சியினரை போலீசார் வெளியேற்றினர். அப்போது, போலீசாருக்கும், அரசியல் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தேர்தல் ஊழியர்கள் மறியல்
உத்திரமேரூர் சட்டசபை தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு கூடுதலாக ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களும், ஓரிக்கை தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.அப்போது, உணவு, குடிநீர் போன்ற வழங்கவில்லை எனக்கூறி, நேற்று முன்தினம், இரவு 9:00 மணியளவில், உத்திரமேரூர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். தேர்தல் அதிகாரிகள் நேரில் சென்று சமாதானம் செய்த பின், மறியலை அவர்கள் கைவிட்டனர்.