செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில், பாலாற்றங்கரையில் அமைந்துள்ள கன்னியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடித்திருவிழா கோலாகலமாக நடக்கும்.இந்த ஆண்டு ஆடித்திருவிழா, கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி, கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது. தொடர்ந்து, மூன்றாம் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது.கோவிலில் இருந்து அம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, ஊர்வலமாக சென்றார். கோவில் நிர்வாகிகள் குண்டத்தில் இறங்கி, தீமிதி விழாவை துவக்கி வைத்தனர்.அதன்பின், பக்தர்கள் தீமிதிக்க அனுமதிக்கப்பட்டனர். 1,000ரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டத்தில் இறங்கி, பயபக்தியுடன் வேண்டுதலை நிறைவேற்றினர்.இவ்விழாவில், காஞ்சிபுரம், சென்னை, வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.செங்கல்பட்டு -- மணப்பாக்கம் இடையே அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. எஸ்.பி., சாய் பிரணீத் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார், தீயணைப்பு வீரர்கள், மருத்துவக்குழுவினர் பணியில் இருந்தனர்.