| ADDED : ஜூன் 28, 2024 11:04 PM
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், ஆடுகளுக்கான தீவன மேலாண்மை குறித்து, ஆடு வளர்ப்போருக்கு ஒரு நாள் பயிற்சி நேற்று முன்தினம் அளிக்கப்பட்டது.வேளாண் அறிவியல் நிலைய கால்நடை துறை உதவி பேராசிரியை அபர்ணா, இந்த பயிற்சியை நடத்தினார். இதில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த, 15க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அவர்களுக்கு, ஆடுகளுக்கான ஊட்டச்சத்து தீவனத்தின் தேவைகள், சுழற்சிமுறை மேய்த்தல் மற்றும் அதன் பயன்பாடு குறித்தும் விளக்கப்பட்டது.ஆடுகளுக்கு கோடை மற்றும் வறட்சி காலங்களில் தீவனம் அளிக்கும் முறை, பசுந்தீவனத்தை பதப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.மேலும், அடர் தீவனம் மற்றும் தாது உப்புக்களின் முக்கியத்துவம், பால் மாற்று பொருளின் அவசியம், ஆடுகளுக்கான தானுவாஸ் தாது உப்புக் கலவை குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.அசோலா மற்றும் ஹைட்ரோ போனிக் விவசாயம் குறித்தும், மரபு சார்ந்த தீவனங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.தொடர்ந்து, வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்ள தீவன பண்ணையில், அசோலா பசுந்தீவனம் வளர்ப்பு குறித்து, நேரடியாக விளக்கப்பட்டது.