உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அடிக்கடி ரத்து செய்யப்படும் அந்தமான் விமானங்கள் சுற்றுலா பயணியர் அவதி

அடிக்கடி ரத்து செய்யப்படும் அந்தமான் விமானங்கள் சுற்றுலா பயணியர் அவதி

சென்னை, அந்தமானின் போர்ட்பிளேருக்கு, சென்னை, பெங்களூரு, கோல்கட்டா உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து, 'இண்டிகோ, ஏர் இந்தியா, ஆகாசா ஏர்' உள்ளிட்ட நிறுவனங்கள், தினசரி மற்றும் வாராந்திர அடிப்படையில் விமானங்களை இயக்குகின்றன. விமான கட்டணம், வார நாட்களில், 3,800 ரூபாயிலிருந்தும், விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில், 10,000 ரூபாய்க்கு மேலும் நிர்ணயிக்கப்படுகிறது.பயணியர் பலரும் முன்பதிவு செய்து, விமான நிலையம் வந்து காத்திருக்கும் நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீர் திடீரென அந்தமான் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதால், விடுப்பு எடுத்து, சுற்றுலா செல்ல தயாராக வரும் பயணியரும், சுற்றுலா ஏற்பாட்டாளர்களும் அவதியடைகின்றனர்.சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:பொதுவாக ஐ.டி., துறை இளைஞர்கள், புதுமண தம்பதியர் அந்தமான் சுற்றுலாவை அதிகம் விரும்புகின்றனர். ஆனால், சென்னையில் இருந்து போர்ட்பிளேர் செல்லும் பெரும்பாலான விமானங்கள் திடீரென ரத்து செய்யப்படுகின்றன. இதனால், சுற்றுலா பயணியர் அதிருப்தி அடைகின்றனர். அவர்களில் பலர், அதே கட்டணத்தில் வேறொரு நாளில் சுற்றுலா செல்ல விரும்புவதில்லை.விமான ரத்துக்கு முக்கிய காரணம், அந்தமானில் அடிக்கடி மாறும் வானிலை தான். மேலும், சில விமான நிறுவனங்கள், பயணியர் வருகை குறைவு என்ற காரணத்தால் விமான சேவையை ரத்து செய்கின்றன. இது, டிராவல் ஏஜென்சி தொழிலை கடுமையாக பாதிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:வெப்ப மண்டல பகுதியாகவும், தீவுப்பகுதியாகவும் அந்தமான் இருப்பதால், அடிக்கடி வானிலை மாற்றங்களுக்கு உள்ளாகிறது. பொதுவாக கன மழை, பலத்த காற்று மற்றும் சூறாவளி ஆகியவை விமான சேவைக்கு சாதகமாக இருக்காது. கன மழை, மேகமூட்டம் உள்ளிட்டவற்றால், வெளிச்சம் இருக்காது. இது, பைலட்டின் பார்வை திறனுக்கு சவலாக அமையும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், விமானத்தை வேறு எங்கும் தரை இறக்கும் வாய்ப்பும் அமையாது.ஆனால், அந்தமானின் புவியியல் அமைப்பால், இதுபோன்ற மாற்றங்கள் அடிக்கடி நிகழும். அதனால், பயணியரின் பாதுகாப்பு கருதி, விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.அந்தமான் வீரசாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்டவற்றுக்கான புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ