புதுப்பட்டினம், கல்பாக்கம் அடுத்த வாயலுார் - கடலுார் இடையே பாலாறு கடக்கிறது. வாகனங்கள் ஆற்றைக் கடக்க, 50 ஆண்டுகளுக்கு முன், 1 கி.மீ., நீள தரைப்பாலம் அமைக்கப்பட்டது. சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்திற்கு, இப் பாலம் பயன்பட்டது.பாலம் பலவீனமடைந்த நிலையில், கடந்த 2016ல், பழைய பாலம் அருகில், நான்கு வழி பாலம் அமைக்கப்பட்டது.புதிய பாலத்தில், தற்போது வாகனங்கள் கடக்கின்றன. பழைய பாலம் கைவிடப்பட்டு, பயன்பாடில்லாத நிலையில், மதுப்பிரியர்களின் புகலிடமாக மாறியுள்ளது.அப்பகுதி டாஸ்மாக் கடையில் மது வாங்கி வந்து, இப்பாலத்தில் குவியும் மதுப்பிரியர்கள், மது அருந்திவிட்டு, காலி பாட்டில், குடிநீர் கேன், நொறுக்குத்தீனி காலி பாக்கெட்டுகளை பாலத்தில், ஆற்றில் வீசிச் செல்கின்றனர். அதனால், பாலத்தில் குப்பை குவிந்து, முழு நீளத்திற்கும் அலங்கோலமாக உள்ளது. கல்பாக்கம் அருகில் உள்ளதால், பாலத்தை பராமரித்து, நடைபயிற்சிக்கும், தடுப்பணை நீர்ப் பரப்பை ரசிக்கும் தளமாகவும் பயன்படுத்தலாம்.பாலத்தில் குப்பையின்றி துாய்மையாக பராமரித்து, மதுப்பிரியர்களின் அட்டூழியத்தை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.