செங்கல்பட்டு,:செங்கல்பட்டு மாவட்ட வனக்கோட்ட விரிவாக்க மையம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அம்மா உணவகம், அறிவுசார் மையம் மற்றும் நகர காவல் நிலையம் ஆகிய பகுதிகளில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி, நேற்று ஆய்வு செய்தார்.கலெக்டர் அருண்ராஜ், எஸ்.பி., சாய் பிரணீத் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.ஆய்வுக்கு பின், பள்ளி, கல்லுாரிகள் மற்றும் ஐ.டி.ஐ., வளாகங்களில், நீர்மத்தி, நாவல் மரங்களை நட்டு வளர்க்கலாம். விதை பண்ணைகளில் இருந்து, வேங்கை, செம்மரம் போன்ற மரங்களை, திருவள்ளூர், திருப்பத்துார் மாவட்டங்களில் இருந்து வாங்கி நட வேண்டும் என அறிவுறுத்தினார்.அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என, கல்லுாரி முதல்வருக்கு உத்தரவிட்டார். அம்மா உணவகத்தில் பொருட்கள் இருப்புமற்றும் மதிய உணவிற்காக தயார் செய்த உணவு வகைகளை ஆய்வு செய்தார்.நுாலகம் மற்றும் அறிவுசார் மையத்தில், ஐ.ஏ.எஸ்., நீட் ஆகிய தேர்வுகளுக்கான பயிற்சி புத்தகங்கள் வாங்கி தர வேண்டும். இணைய வசதி ஏற்படுத்த வேண்டும்.மையத்திற்கு வருவோருக்கு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வாயிலாக பயிற்சியளிக்க வழங்க வேண்டும் என, கலெக்டருக்கு உத்தரவிட்டார்.நகர காவல் நிலையத்தில், முதல் தகவல் அறிக்கை, வருகை பதிவேடு மற்றும் கண் காணிப்பு கேமராக்களை சோதனை செய்தார்.அதன்பின், செங்கல்பட்டு அறிஞர் அண்ணா ஆண்கள் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 140 மாணவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசுகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி வழங்கினார்.