செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட, 6வது வார்டு பனையூர்சின்னகுப்பம் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில், 15 ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. குற்றச்சாட்டு
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், நிலத்திற்கு அடியில் பொருத்தப்பட்டுள்ள குழாய்கள் வழியாக, கழிவு நீர் தேக்கத்தொட்டிக்கு சென்றடையும்.பின், தேக்கத்தொட்டியில் இருந்து ராட்சத மின் மோட்டார் வாயிலாக, கடற்கரைப் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிக்கு கழிவுநீர் வெளியேற்றப்படும்.கடந்த 4 மாதங்களாக, கழிவுநீர் தேக்கத்தொட்டியில் செயல்படும் மின் மோட்டாருக்கு மின் வினியோகம் செய்யும் மின்மாற்றி பழுதடைந்துள்ளது. அதனால், கழிவு நீர் தேக்கத்தொட்டியில் இருந்து வெளியேற்றப்படாமல் தேங்கியுள்ளது.மேலும், தேக்கத்தொட்டியில் கழிவுநீர் அதிகரிப்பதால், அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளில் கழிவுநீர் வெளியேறுவதாக, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.அதனால், கழிவுநீர் ஆங்காங்கே தேங்குவதால், கொசு உற்பத்தி அதிகமாகி, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பலமுறை தகவல்
ஆகையால், துறைசார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, மின்மாற்றியை சீரமைத்து, கழிவுநீர் தேக்கத்தொட்டியில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து, 6வது வார்டு கவுன்சிலர் வீரராகவன் கூறியதாவது:கடந்த 4 மாதங்களுக்கு முன், கழிவுநீர் தேக்கத்தொட்டியில் செயல்படும் மின் மோட்டாருக்கு மின் வினியோகம் செய்யும் மின்மாற்றி பழுதடைந்தது. இதுகுறித்து, துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மின் மாற்றியில் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆகையால், சீரமைக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது என, மின் வாரிய ஊழியர்கள் தொடர்ந்து அலைகழித்து வருகின்றனர். ஆகையால், நான்கு மாதங்களாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படவில்லை. கோடைகாலம் என்பதால் கழிவுநீர் வெளியேறுவதை சமாளித்து விட்டோம்.இன்னும் சில மாதங்களில் மழைகாலம் துவங்க உள்ள நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படவில்லை எனில், குடியிருப்புப் பகுதி மற்றும் சாலை முழுதும் கழிவுநீர் தேங்கும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.