உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூரிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு மீண்டும் பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

திருப்போரூரிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு மீண்டும் பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

திருப்போரூர் : திருப்போரூர் வழியாக, சென்னை பாரிமுனையிலிருந்து மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு இயக்கப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.கடந்த 2006ம் ஆண்டு, சென்னை மாநகர எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு, பாரிமுனை பகுதியிலிருந்து அடையாறு, சோழிங்கநல்லுார், சிறுசேரி, கேளம்பாக்கம் வழியாக, திருப்போரூருக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.தற்போது, பாரிமுனை - திருப்போரூர் இடையே ஓ.எம்.ஆர்., மற்றும் இ.சி.ஆர்., சாலை வழியே, 14 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, திருப்போரூர் வழியாக சுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு, தாம்பரத்திலிந்தும் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.மேலும், ஓ.எம்.ஆர்., சாலையில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகளும், சிறப்பு பொருளாதார மண்டலமாக எண்ணற்ற தகவல் தொழில்நுட்ப தொழிற்சாலைகளும், 15க்கும் மேற்பட்ட கல்லுாரிகளும் உள்ளன.திருப்போரூரில் கந்தசுவாமி கோவிலும் உள்ளது. இக்கோவிலுக்கு, வெளிமாவட்ட பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, கடந்த 2019ம் ஆண்டு, தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு நான்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.எதிர்பாராதவிதமாக, கொரோனா தொற்று காலத்தில், இப்பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டன. அவற்றை மீண்டும் இயக்கக்கோரி, இப்பகுதி சமூக ஆர்வலர்களும், பயணியரும் அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.கொரோனா தொற்று சரியான பின், மீண்டும் இயக்கப்படும் என, தெரிவித்தனர். ஆனால், இதுவரை பேருந்துகள் இயக்கப்படவில்லை.எனவே, நிறுத்தப்பட்ட வெளிமாவட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க, மாநில போக்குவரத்து அமைச்சர் மற்றும் மாவட்ட அமைச்சர், இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி