| ADDED : ஜூன் 04, 2024 05:29 AM
சென்னை : கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் காயத்ரி, 45. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், மறுமணம் செய்ய திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார்.இந்த பதிவை பார்த்து, கோயம்புத்துாரைச் சேர்ந்த யுவராஜ், 50, என்பவர் காயத்ரியை அணுகி, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.இதையடுத்து, கண் திருஷ்டி கழிக்க, மாங்காடுகாமாட்சி அம்மன் கோவிலுக்கு நகையுடன் வர வேண்டும் என்று யுவராஜ் கூறியுள்ளார். இதை நம்பிய காயத்ரி, 5 சவரன் நகையுடன் சென்றுள்ளார்.அங்கு இருவரும் சுவாமி தரிசனம் செய்த பின், நகைகளை ஒரு சிறிய பானையில் வைத்து மூடி கொடுத்துள்ளார்.அதை வீட்டின் பூஜை அறையில் மூன்று நாட்கள் வைத்து வழிபாடு செய்த பின், திறந்து நகைகளை எடுத்துக் கொள்ளுமாறு யுவராஜ் கூறியுள்ளார்.இதை உண்மையென நம்பி, அந்த பானையை வீட்டின் பூஜை அறையில் வைத்து காயத்ரி வழிபட்டார்.மறுநாள் யுவராஜ் மொபைல்போன் அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்த காயத்ரி, பானையை திறந்து பார்த்த போது, அதில் நகை இல்லாமல், கண்ணாடி வளையல்கள் இருந்துள்ளன.அதிர்ச்சியடைந்த அவர், மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர்.இதில், மறுமணம் செய்ய திருமண தகவல் மையத்தில் பதிவு செய்த சில பெண்களை, இதேபோல் யுவராஜ் ஏற்கனவே ஏமாற்றி நகை பறித்தது தெரிந்தது.யுவராஜை, மாங்காடு போலீசார் கைது செய்து, நேற்று சிறையில்அடைத்தனர்.