உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூட்டு குடிநீர் திட்டம் ஏற்படுத்த மானாமதி மக்கள் எதிர்பார்ப்பு

கூட்டு குடிநீர் திட்டம் ஏற்படுத்த மானாமதி மக்கள் எதிர்பார்ப்பு

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில் அடங்கிய மானாமதி, சந்தினாம்பட்டு, அகரம், பெரியார் நகர், தட்சிணாவரம், ஈச்சம்பள்ளம், குயில்குப்பம், ஆனந்தபுரம் ஆகிய கிராமங்களில், 15,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, போர்க்கால நடவடிக்கையாக, மானாமதி ஏரியில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுகுறித்து மக்கள் கூறியதாவது:மானாமதி ஊராட்சியில் அடங்கிய கிராமங்களுக்கு, அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு வாயிலாக குடிநீர் வழங்கப்படுகிறது. கோடை காலத்தில், பொதுமக்கள் வசிக்கும் பகுதி மற்றும் அரசு அலுவலகங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. பல கி.மீ., நடந்து சென்று, தண்ணீர் எடுத்து வரும் நிலைமை உள்ளது.சட்டசபை கூட்டத்தில், திருப்போரூர் அடுத்த தையூர் ஏரியில் இருந்து, அருகில் உள்ள ஊராட்சிக்கு பல கோடி ரூபாய் செலவில், கூட்டு குடிநீர் திட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், மானாமதி ஏரி 500 ஏக்கர் பரப்பளவு உடையது.மழைக்காலங்களில் ஏரியில் நிரம்பி வழியும் தண்ணீர், வீணாக கடலில் சென்று கலக்கிறது.மானாமதி ஏரியிலும் கூட்டு குடிநீர் திட்டத்தை அமல்படுத்தினால், இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. வீணாக கடலில் கலக்கும் மழை நீரையும் தடுக்கலாம்.இந்த கூட்டு குடிநீர் திட்டத்தால், அனைத்து கிராமங்களுக்கும், 24 மணி நேரமும் குடிநீர் வழங்க முடியும். தமிழக அரசு, மானாமதி ஏரியில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி