பல்லாங்குழி சாலையால் மருதேரிவாசிகள் தவிப்பு
மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில் அடுத்த தர்காஸ் -- மருதேரி சாலை, 4 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை மருதேரி, கொண்டங்கி, கருநிலம், அனுமந்துபுரம் உள்ளிட்ட கிராம மக்கள், சுற்றுப் பகுதிகளுக்குச் சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.இந்த தடத்தில் பேருந்து வசதி இல்லாததால், இந்த சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிக அளவில் சென்று வருகின்றனர்.இந்த சாலை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளை கடந்ததால், கடுமையாக சேதமடைந்து உள்ளது.குறிப்பாக தர்காஸ் -- மருதேரி வரை வனப்பகுதி இடையே ஜல்லிகற்கள் பெயர்ந்து, மிகவும் மோசமாக காணப்படுகிறது.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: இந்த சாலை படுமோசமாக உள்ளதால், அவசர காலங்களில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. வாகனங்களின் 'டயர்'களில் ஜல்லி கற்கள் குத்தி, அடிக்கடி பஞ்சராகி விடுகின்றன.இருபுறமும் வனப்பகுதி உள்ளதால், இரவில் இந்த பகுதியை அச்சத்துடன் கடக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.