ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த கோரி அணுமின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கல்பாக்கம்:அணுசக்தி துறையின்கீழ், என்.பி.சி.ஐ.எல்., எனப்படும் இந்திய அணுமின் கழகம், பொதுத்துறை நிறுவனமாக இயங்குகிறது. வர்த்தகம் சார்ந்த அணுமின் உற்பத்திக்காக, அணுசக்தி துறை, கடந்த 1987ல், இந்நிறுவனத்தை துவக்கியது.இந்நிறுவனத்தின்கீழ், கல்பாக்கத்தில், சென்னை அணுமின் நிலையம், திருநெல்வேலி மாவட்டத்தில், கூடங்குளம் அணுமின் நிலையம், பிற மாநிலங்களில் என, அணுமின் நிலையங்கள் இயக்குகின்றன.இந்நிலையங்களை அணுசக்தி துறை நிர்வகித்து, பின் என்.பி.சி.ஐ.எல்., நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. அவ்வாறு மாற்றப்பட்டபோது, நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பதாக உறுதியளித்த அத்துறை, தற்போது வரை ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை.துறையின் பிற நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்நிறுவன ஊழியர்களுக்கு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.நிறுவன துவக்க நாளான நேற்று, கல்பாக்கத்தில் இயங்கும் சென்னை அணுமின் நிலைய ஊழியர் தொழிற்சங்கமான தமிழ்நாடு அணுமின் ஊழியர் சங்கத்தினர், நேற்று கொண்டாட்டத்தை புறக்கணித்து, கறுப்பு தினமாக கடைபிடித்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சதுரங்கப்பட்டினம் ரவுண்டானா பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க தலைவர் சின்னகோவிந்தன், பொதுச்செயலர் கருணாமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தாததை கண்டித்து பேசினர்.சென்னை அணுமின் நிலைய ஊழியர்கள், இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்றனர்.