மதுராந்தகத்தில் புதிதாக டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு
மதுராந்தகம், : மதுராந்தகம் - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, மதுராந்தகம் டவுன் பகுதிக்கு உள் நுழையும் புறவழிச் சாலையில், அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இதனால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.பள்ளி, கல்லுாரி மாணவியர், வேலைக்கு சென்று வரும் பெண்கள், அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.இந்நிலையில், ஏற்கனவே உள்ள அரசு மதுபான கடை எதிரே, 50 மீட்டர் துாரத்திற்குள், புதிதாக பார் வசதியுடன் கூடிய மதுபான கடை அமைக்க, டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.இந்த இடத்தில் மதுபான கடை அமைந்தால், போக்குவரத்து பாதிக்கப்படும். மேலும், பார் வசதியுடன் மதுபான கடை அமைவதால், மது அருந்த வரும் மது பிரியர்கள், வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்லும் சூழல் ஏற்படும்.செய்யூர், சூணாம்பேடு, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, ஆம்புலன்ஸ் வாயிலாக நோயாளிகளை அழைத்துச் செல்ல உள்ள சுற்று வட்ட சாலையில், கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.அவசர காலத்தில் தீயணைப்பு வாகனங்கள், டவுன் பகுதியில் இருந்து வெளியேறும் மிக முக்கிய சாலை வழியில், போக்குவரத்து பாதிக்கப்படும். இதனால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும்.எனவே, புதிதாக அமைய உள்ள அரசு மதுபான கடையை, வேறொரு இடத்தில் அமைக்க, உரிய துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.