உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீடு கட்டுமான பணிகள் தாமதம் ரூ.1.26 கோடி திருப்பித்தர உத்தரவு

வீடு கட்டுமான பணிகள் தாமதம் ரூ.1.26 கோடி திருப்பித்தர உத்தரவு

சென்னை:ஒப்பந்தத்தில் தெரிவித்த கால கெடுவுக்குள் பணிகளை முடித்து வீட்டை ஒப்படைக்காத கட்டுமான நிறுவனம், அதற்காக வசூலித்த, 1.26 கோடி ரூபாயை வட்டியுடன் திருப்பித்தர வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில், 'அலியன்ஸ் வில்லாஸ் லிமிடெட்' என்ற நிறுவனம் சார்பில், குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், 1.36 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்க, டுவிங்கிள் பிரீத்தி சிவகுமார் என்பவர், 2018ல் முன்பதிவு செய்தார். இதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில், அவர், வீட்டின் விலையில், 1.26 கோடி ரூபாயை பல்வேறு தவணைகளாக செலுத்தி உள்ளார். ஆனால், ஒப்பந்தப்படி கட்டுமான பணிகளை குறித்த கால வரம்புக்குள், அந்நிறுவனம் மேற்கொள்ளவில்லை.இதனால், அத்திட்டத்தில் இருந்து விலக முடிவு செய்த டுவிங்கிள் பிரீத்தி சிவகுமார், அது குறித்து கட்டுமான நிறுவனத்துக்கு தெரிவித்தார். இதற்கு, அந்நிறுவனம் முறையாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணைய உறுப்பினர் சுனில் குமார் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தெரிவித்தபடி, சம்பந்தப்பட்ட கட்டுமான திட்டத்தில், குறிப்பிட்ட காலத்தில் பணிகள் முடிக்கப்படவில்லை. இதற்கு, கட்டுமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை. எனவே, இத்திட்டத்தில் இருந்து விலகுவது என்ற மனுதாரரின் முடிவுக்கு, கட்டுமான நிறுவனம் ஒத்துழைக்க வேண்டும். இதற்காக, அவர் ஏற்கனவே செலுத்திய, 1.26 கோடி ரூபாயை வட்டியுடன் திருப்பித்தர வேண்டும். வழக்கு செலவுக்காக, மனுதாரருக்கு, 25,000 ரூபாயை கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும். இந்த உத்தரவை, 30 நாட்களுக்குள் கட்டுமான நிறுவனம் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை