| ADDED : ஆக 08, 2024 01:14 AM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகர் பகுதியில், ஓசூரம்மன் கோவில் உள்ளது. ஆடி மாத கூழ்வார்த்தல் உள்ளிட்ட நிகழ்வுகளில், அம்மனும், விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகரும் வீதியுலா செல்வர்.வீதியுலாவின்போது, மற்றொரு தரப்பினர் வசிக்கும் புதுமேட்டுத்தெரு வழியாக, வீதியுலா செல்வது வழக்கம்.இந்நிலையில், தங்கள் பகுதியில் வீதியுலா செல்லும்போது, பிரச்னை ஏற்படுவதாக கூறி, அப்பகுதி வழியில் செல்வதை தவிர்க்க வலியுறுத்தி, வருவாய் துறையினரிடமும், காவல் துறையினரிடமும், புதுமேட்டுத் தெரு பகுதியினர் முறையிட்டனர்.இதையடுத்து, தாசில்தார் ராதா, தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து, இரண்டு பகுதியினரிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அவரவர் தரப்பு கருத்தை தெரிவித்தனர்.இறுதியில், கோவில் உற்சவத்தை அமைதியாக நடத்தி, சுவாமி வீதியுலா செல்லவும், பிரச்னை ஏற்படாமல் தவிர்க்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் முடிவெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக, இரண்டு தரப்பினரிடம் ஒப்புதல் கடிதமும் பெறப்பட்டது.