சேலையூர்:சேலையூரை அடுத்த வேங்கைவாசல் பிரதான சாலையில், மழைநீர் செல்ல வசதியாக, ரெடிமேட் பாக்ஸ் கல்வெட்டு பொருத்தியும், அதற்கான வரத்து, போக்கு பாதைகள் மூடப்பட்டுள்ளதாக, அப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.தாம்பரம் - வேளச்சேரி சாலையில் இருந்து வேங்கைவாசல் வழியாக நுாத்தஞ்சேரி, மாடம்பாக்கம் வழியாக வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையை இணைக்கிறது, வேங்கைவாசல் பிரதான சாலை.மழைக்காலத்தில், வேங்கைவாசல் பெரிய ஏரி நிரம்பும் போது, அதன் உபரி நீர், சாலையை கடந்து, சிறிய ஏரிக்கு செல்லும். சாலையை கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கால்வாய் சிறிதாக உள்ளதால், மழைக்காலத்தில் வெள்ளம் தடைப்பட்டு, வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.ஒவ்வொரு மழையிலும் இப்பிரச்னை நீடிப்பதால், கால்வாயை அகலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. செங்கல்பட்டின் அப்போதைய கலெக்டராக இருந்த ராகுல்நாத், இப்பகுதியை ஆய்வு செய்து, கால்வாயை அகலப்படுத்த உத்தரவிட்டார்.இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர், அந்த இடத்தில் பழைய கால்வாய் அருகே புதிதாக ரெடிமேட் பாக்ஸ் கல்வெட்டு பொருத்தினர். ஆனால், அதற்கான வரத்து, போக்கு பாதைகளை ஏற்படுத்தாமல் விட்டு விட்டனர்.இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:வேங்கைவாசல் பிரதான சாலை, அதிக போக்குவரத்து கொண்டது. முக்கியமான இச்சாலையில், ஏரி உபரி நீர் செல்வதற்காக, நெடுஞ்சாலைத் துறையினர் ரெடிமேட் பாக்ஸ் கல்வெட்டு பொருத்தினர். இது வரவேற்கக் கூடிய விஷயம் என்றாலும், தண்ணீர் செல்வதற்காக பாதைகளை ஏற்படுத்தாமல் விட்டு விட்டனர். மேலும், கல்வெட்டு பொருத்திய இடத்தில் சாலை அமைக்கவில்லை.அதேபோல், வேங்கைவாசல் மெயின்ரோடு - ஆஞ்சநேயர் கோவில் சாலை சந்திப்பிலும் ரெடிமேட் கல்வெட்டு பொருத்தினர். அங்கேயும் சாலை அமைக்கவில்லை.இதனால், இந்த இடங்களில் தினமும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலைத் துறையினர் கண்டுக்கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறியதாவது:கல்வெட்டு பொருத்தப்பட்டுள்ள இடத்தில் வரத்து, போக்கு பாதைகளில் மண் கொட்டப்பட்டுள்ளது. மழை துவங்கும் போது, இருபுறத்திலும் மண்ணை அகற்றி, பாதை ஏற்படுத்தப்படும்.அதேபோல், கல்வெட்டு பொருத்திய இரண்டு இடங்களிலும், விரைவில் சாலை அமைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.