| ADDED : மே 30, 2024 12:54 AM
சித்தாமூர்:சித்தாமூர் அருகே பூரியம்பாக்கம் கிராமத்தில், மதுராந்தகம் - சூணாம்பேடு சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது.இப்பகுதியில், தனியார் பள்ளி மற்றும் தனியார் தொழிற்சாலை செயல்படுவதால், தினசரி ஏராளமான மக்கள் இந்த பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கின்றனர். மேலும், கடைகள் மற்றும் குடியிருப்புகள் இப்பகுதியில் உள்ளன.ஆகையால், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, 2017ம் ஆண்டு ஊரக வளர்ச்சித் துறை சார்பாக, மினி டேங்க் கட்டப்பட்டது.இந்த மினி டேங்க் தண்ணீரை, பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணியர் குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், மின் மோட்டாரின் பாகங்கள் பழுதடைந்ததால், மினி டேங்கிற்கும் தண்ணீர் ஏற்றாமல் நிறுத்தப்பட்டது.துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, மின் மோட்டாரை சீரமைத்து, மினி டேங்கிற்கு தண்ணீர் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியிடப்பட்டது.இந்நிலையில், பூரியம்பாக்கம் ஊராட்சி சார்பாக, ஆழ்துளை கிணறு, மினி டேங்க், குழாய்கள் சீரமைக்கப்பட்டு, மினி டேங்க் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளதால், அப்பகுதிவாசிகள் மகிழ்சியடைந்துள்ளனர்.