மறைமலை நகர் 20வது வார்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பழுது
மறைமலை நகர்,:மறைமலை நகர் நகராட்சி, 20வது வார்டில், பாரதி நகர், பராசக்தி நகர், ஸ்ரீவாரி நகர் உள்ளிட்ட பகுதிகளில், 1,000த்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்த பகுதி மக்களின் தேவைக்காக, நகராட்சி சார்பில், கடந்த 2018ம் ஆண்டு, ராசக்தி நகர் மற்றும் பாரதி நகர் பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.சில ஆண்டுகள் முறையாக பராமரிக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம், நாளடைவில் பராமரிப்பின்றி வீணானது. இதன் காரணமாக, அப்பகுதிவாசிகள் வெளியில் விலை கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.இது குறித்து இப்பகுதிவாசிகள் கூறியதாவது:இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் முறையாக செயல்பட்டன. அதன் பின், உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால், நகராட்சி அதிகாரிகள் சுத்திகரிப்பு நிலையத்தை கண்டுகொள்ளவில்லை.கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின், வெற்றி பெற்ற கவுன்சிலர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பழுது நீக்கம் செய்து, திறப்பு விழா நடத்தி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.பழுது நீக்கம் செய்யப்பட்ட சில மாதங்களில், மீண்டும் சுத்திகரிப்பு நிலையம் பழுதடைந்து விட்டது. தற்போது, உள்ளாட்சி பிரதிநிதிகளும், இதனை கண்டுகொள்ளவில்லை.இதனால், மாதம்தோறும் குடிநீருக்காக தனியாக பணம் எடுத்து வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பழுது நீக்கம் செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.