சூணாம்பேடு: சூணாம்பேடு ஊராட்சியின் மையப்பகுதியில், பஜார் பகுதி உள்ளது. இங்கு, காவல் நிலையம், ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அஞ்சலகம், பள்ளி, வங்கி போன்றவை செயல்படுகின்றன.மேலும், ஏராளமான வணிக வளாகங்கள் உள்ளதால், சூணாம்பேடு சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர், தினசரி பஜார் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.தற்போது அமைக்கப்பட்டுள்ள தார் சாலையின் மொத்த அகலம் 7 மீட்டர் உள்ளதால், கார், வேன், பேருந்து, லாரி ஆகியவை சென்று வர கடினமாக உள்ளது.முன்னே செல்லும் வாகனங்களை முந்த முயற்சிக்கும் போது, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், பஜார் வீதிக்கு வரும் பொதுமக்கள், தங்களது வாகனங்களை சாலையில் தாறுமாறாக நிறுத்துவதாலும், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.மேலும், சாலை ஓரத்தில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.ஆகையால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை அளவீடு செய்து, விரிவாக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.