செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுார், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, தினமும் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்கள், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து வேறு பேருந்து, ஆட்டோ அல்லது ஷேர் ஆட்டோக்களில் வந்து, மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி செல்கின்றனர்.இந்த பகுதியில் உள்ள சாலை சந்திப்பில் சிக்னல் இல்லாததால், ஆபத்தான நிலையில் சாலையை கடந்து செல்கின்றனர்.இந்த சாலை, அதிக வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள சாலை. இதன் காரணமாக, சாலையை கடப்போர், அடிக்கடி சிறு சிறு விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:இந்த சாலையை கடந்து மருத்துவமனை செல்லவும், மருத்துவமனையில் இருந்து சாலையை கடக்கவும், மிகவும் அச்சமாக உள்ளது. அருகே உள்ள கடைகளுக்கு வருவோரும், சாலையை கடக்கும் இடத்தில் தங்களின் வாகனங்களை நிறுத்தி விடுவதால், சாலையை கடக்க சிரமமாக உள்ளது.மேலும், இந்த பகுதியில் சிக்னல் மற்றும் போக்குவரத்து போலீசார் இல்லாததால், முதியவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து, சாலையை கடக்கும் நிலை உள்ளது. எனவே, இந்த பகுதியில் சிக்னல் அமைத்து, போக்குவரத்து போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.