மறைமலை நகர், : மறைமலை நகர் நகராட்சி, கீழக்கரணை பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இப்பகுதிவாசிகள், கல்வி, மருத்துவம், வங்கி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு, மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்த பகுதிக்கு, கடந்த 2011ல், தாம்பரத்தில் இருந்து கீழக்கரணை வரை, தடம் எண்: எம்118கே என்ற மாநகர பேருந்து இயக்கப்பட்டது.பேருந்து, மறைமலை நகர் காமராஜர் சாலை, கீழக்கரணை பிள்ளையார் கோவில் வழியாக சென்று வந்தது. இந்த பேருந்து சேவையால், பள்ளி, கல்லுாரி மாணவியர், வேலைக்கு செல்லும் பெண்கள் பயனடைந்தனர்.இந்த பேருந்து சேவை, பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டதால், கீழக்கரணை பகுதிவாசிகள் தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு செல்ல, 2 கி.மீ., நடந்து சென்று ஜி.எஸ்.டி., சாலையில் பேருந்து பிடித்துச் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:இந்த தடத்தில் பேருந்து சேவை இல்லாததால், இரவு பணி முடித்து வரும் பெண்கள் அச்சத்துடன் நடந்து வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.இந்த தடத்தில் சென்று வந்த மாநகர பேருந்து, கடந்த 2017ல் எந்த அறிவிப்பும் இல்லாமல் நிறுத்தப்பட்டது. அப்போது, போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டபோது, வருவாய் இழப்பு காரணமாக பேருந்து நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.இந்த பகுதியில், தற்போது குடியிருப்புகள் அதிக அளவில் ஏற்பட்டு உள்ளன. எனவே, பொதுமக்கள் சிரமத்தை உணர்ந்து, இந்த தடத்தில் மீண்டும் பேருந்து சேவை வழங்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.