செங்கை கடலோர பகுதிகளில் சாகர் கவாச் கண்காணிப்பு ஒத்திகை
மாமல்லபுரம்:கடல் வழியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தவிர்க்க, கடலோர பகுதிகளில், 'சாகர் கவாச்' என்ற பயங்கரவாத கண்காணிப்பு மற்றும் தடுப்பு ஒத்திகை, ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது.கடலோர பாதுகாப்பு படை சார்பில், நேற்று காலை கடலோர பகுதிகளில், ஒத்திகை துவக்கப்பட்டது. போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், கல்பாக்கம் அணுசக்தி வளாகம் அருகில் உள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணித்தனர்.கடலோர சாலையில் சென்ற வாகனங்களில், போலீசார் சோதனை நடத்தினர். கல்பாக்கத்தில், ராணுவத்தினர், சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள், அணுசக்தி தொழில் வளாகம் மற்றும் நகரிய பகுதிகளில், சந்தேக நபர்கள், பிற இடங்களிலிருந்து வந்த வாகனங்களை கண்காணித்தனர்.கடலோர பாதுகாப்பு குழும போலீசார், மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட பகுதி கடலில், படகில் ரோந்து சென்று கண்காணித்தனர். மாமல்லபுரம் சுற்றுலா விடுதிகளில் தங்கும் நபர்கள் விபரம் சேகரிக்கப்பட்டன.மீனவ பகுதிகளில், கடலில் அன்னியர் நடமாட்டம் இருந்தால், உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்குமாறு, போலீசார் மீனவர்களை அறிவுறுத்தினர். இன்று மாலை வரை, ஒத்திகை தொடர்கிறது.