திருப்போரூர்:காஞ்சிபுரம், -செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கத்தினர், தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், கார்ப்பரேட் சலுான்களின் வெளியே வைக்கப்படும் விலை சார்ந்த போர்டுகளை அகற்ற வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:செங்கல்பட்டு மாவட்டத்தில், மருத்துவர் நாவிதர் சமூகத்தைச் சேர்ந்த 5,000 குடும்பங்கள் முடி திருத்தும் தொழில் செய்து வருகின்றன.தற்போதைய சூழ்நிலையில், நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் திறக்கப்படும் கார்ப்பரேட் சலுான்களால், எங்கள் தொழில் மிகவும் பாதிப்படைந்து வருகிறது.மேலும், கார்ப்பரேட் சலுான்கள், 49 ரூபாய் மற்றும் 99 ரூபாய் என, குறைவான கட்டணம் நிர்ணயம் செய்து, கடைக்கு வெளியே போர்டு வைப்பதன் வாயிலாகவும், போஸ்டர்கள் ஒட்டி விளம்பரப்படுத்துவதன் வாயிலாகவும், வாடிக்கையாளரை தங்கள் வசம் மாற்றி வருகின்றனர்.அதனால், பல ஆண்டுகளாக முடிதிருத்தும் தொழில் செய்து வந்த நாங்கள், எங்கள் கடைகளை நடத்த முடியாமல், இந்த தொழிலை விட்டு மாற்று தொழிலுக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டு வருகிறது.இந்த பாதிப்பினால், எங்கள் குடும்பம், குழந்தைகளின் கல்வி, வருங்கால சந்ததியரின் வாழ்க்கை அனைத்தும் கேள்விக்குறியாக உள்ளது.இதற்காக, நாங்கள் பலமுறை மனுக்கள் அளித்துள்ளோம். எங்கள் தொழிலை பாதிக்கின்ற, நசுக்குகின்ற இந்த கார்ப்பரேட் சலுான்களின் வெளியே வைக்கப்படும் விலை குறித்த போர்டுகளை அகற்ற, ஆணை பிறப்பித்து எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மேலும், இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும், அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை எனில், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.