செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் ஆகிய காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், 20 காவல் நிலையங்கள் உள்ளன.இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த சில மாதங்களில், படாளம் போலீசார், படாளம் கூட்டுச்சாலை பகுதியில், 17 கிலோ கஞ்சா மற்றும் மாமல்லபுரம் மதுவிலக்கு போலீசார் நான்கு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு இருளர் பெண்கள் தப்பி, மதுராந்தகம் வந்தனர். அவர்களை, உடனடியாக மதுராந்தகம் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.சென்னையிலிருந்து இளம்பெண் கடத்திச்செல்வதாக, மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில், அச்சிறுப்பாக்கம் அடுத்த ஆத்துார் சுங்கச் சாவடியில், போலீசார் வாகன சோதனை செய்து, இளம்பெண்ணை மீட்டு சென்னை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.மாமல்லபுரம் பகுதியில், சீர்காழி பகுதியைச் சேர்ந்த ரவுடி சத்யா, பா.ஜ., மாநில வழக்கறிஞர் பிரிவு செயலர் அலெக்ஸ் சுதாகர் உள்ளிட்ட மூன்று பேரை, போலீசார் கடந்த 28ம் தேதி கைது செய்தனர்.இதுபோன்ற பல்வேறு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட, செங்கல்பட்டு டி.எஸ்.பி., புகழேந்தி கணேஷ், மாமல்லபுரம் டி.எஸ்.பி., ரவி அபிராம் உள்ளிட்ட 80 போலீசாருக்கு, பாராட்டு சான்றிதழ்களை செங்கல்பட்டு எஸ்.பி., சாய் பிரணீத்,நேற்று வழங்கினார்.