சென்னை : சென்னை கண்ணகி நகர், செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில், 59,868 வீடுகள் உள்ளன. தமிழகத்தில், வாரியத்தின் பெரிய குடியிருப்பு பகுதியாக உள்ளது.சென்னையின் பல்வேறு பகுதிகளில், நீர்நிலை, சாலையோரம் வசித்தோர், இங்கு மறுகுடியமர்வு செய்யப்பட்டு உள்ளனர்.இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரம் குறித்து, ஐ.ஆர்.சி.டி.யு.சி., எனும் நகர்ப்புற சமூக தகவல் மற்றும் வள மையம் சார்பில், பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு' என்ற தலைப்பில் களஆய்வு நடத்தியது. இதன் அறிக்கை, இரு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இம்மைய நிறுவனர் வெனசா பீட்டர் கூறியதாவது:மூன்று குடியிருப்பு பகுதிகளிலும், இடநெருக்கடியில் மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாக்கத்தில், மத்திய அரசு உத்தரவை மீறி, அதிக குடியிருப்புகள் கட்டப்பட்டதால், மறுகுடியமர்வு செய்யப்பட்ட மக்கள், பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர்.குழந்தை மையங்களுக்காக கட்டப்பட்ட கட்டடங்கள், வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகின்றன. உரிய வழிகாட்டுதல் இல்லாததால், பள்ளி செல்லா மாணவர்கள் அதிகரித்து வருகின்றனர்.சில பிளாக்குகளில், கஞ்சா, போதை மாத்திரை, மது விற்பனை அமோகமாக நடப்பதால், பெண் குழந்தைகள், பெண்கள் அச்சத்துடன் வசிக்கின்றனர்.தெருவிளக்குகள் இல்லாத பகுதியில், இரவில் பணி முடித்து வீடு திரும்பும் பெண்களிடம் வழிப்பறி, சில்மிஷம் நடக்கிறது. போலீசில் புகார் அளித்தால், முறையாக விசாரிப்பது கிடையாது.பெரும்பாக்கத்தில், மகளிர் காவல் நிலையம், கவுன்சிலிங் சென்டர், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு மையம், போதை மறுவாழ்வு மையம் அவசிய தேவையாக இருக்கிறது. மொபைல் டவர் சிக்னல் சீராக கிடைப்பதில்லை.இங்குள்ள மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் துறைகளை கண்காணிக்க, 2011 ஆக., மாதம், தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழு மீண்டும் செயல்பட வேண்டும். கடந்த 2022ல் அமைக்கப்பட்ட குழுவும் முறையாக செயல்படவில்லை.கலெக்டர், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, மக்கள் குறைதீர் முகாம் நடத்த வேண்டும். அப்போது தான், இங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும்.இவ்வாறு அவர் கூறினார்.