| ADDED : ஜூன் 30, 2024 11:08 PM
கூடுவாஞ்சேரி : நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் பெருமாட்டுநல்லுார், காயரம்பேடு, மண்ணிவாக்கம், நெடுங்குன்றம் உள்ளிட்ட ஊராட்சிகளில் அமைந்துள்ள ரேஷன் கடைகளில், இரண்டு மாதங்களாக, பாமாயில், துவரம் பருப்பு வழங்கப்படவில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.நெடுங்குன்றம் ராமகிருஷ்ணன் கூறியதாவது: நெடுங்குன்றம் ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், கடந்த இரண்டு மாதங்களாக, பாமாயில் மற்றும் துவரம் பருப்பு வழங்கப்படவில்லை.இதுகுறித்து கடை ஊழியரிடம் கேட்டபோது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்த பின் டெண்டர் வழங்கப்பட்டு, அதன் பின் விடுபட்ட மாதங்களுக்கும் சேர்த்து பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்தார். ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்து விட்டன. ஆனாலும், இன்னும் பாமாயில், துவரம் பருப்பு வழங்கப்படவில்லை.எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில், பல்வேறு ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்கவில்லை. அனைத்து பொருட்களும் கிடைப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.