உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெற்றோரை தாக்கவில்லையென போலீஸ் விளக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்

பெற்றோரை தாக்கவில்லையென போலீஸ் விளக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்

சென்னை: சென்னை அண்ணா நகர் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த, 10 வயது சிறுமி, ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம், பெண் உறுப்பில் தொற்று ஏற்பட்டு சிறுமி அவதிப்பட்டதால், அவரது பெற்றோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.மருத்துவ பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிந்தது.இதுகுறித்து அண்ணா நகர் மகளிர் போலீசாருக்கு, கடந்த மாதம் 30ம் தேதி, மருத்துவமனையில் இருந்து தகவல் அளிக்கப்பட்டது. உடனே அன்று மாலை, சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் போலீசார் விசாரித்தனர்.அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும், 36 வயது நபர் பாலியல் தொல்லை அளித்ததாக, சிறுமி தெரிவித்தார். அடுத்த நாள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சிறுமியிடம் விசாரித்த போது, தன் தாய் வழி உறவினர் ஒருவரின், 14 வயது மகன் பாலியல் தொல்லை அளித்ததாக கூறினார். மேலும், தன் தாய் கூறியதன்படி, பக்கத்து வீட்டு நபரின் பெயரைக் கூறியதாக சிறுமி தெரிவித்தார். இதையடுத்து, 36 வயது நபர் மற்றும் 14 வயது சிறுவனிடம் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து, சிறுமியிடம் அத்துமீறிய, 14 வயது சிறுவன் மீது 'போக்சோ' வழக்கு பதிந்து, கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். பக்கத்து வீட்டு வாலிபரையும், இந்த வழக்கில் சேர்த்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், புகார் அளித்த எங்களை போலீசார் அடித்து, பொய் வழக்கு போடுவதாக மிரட்டுகின்றனர்' என, சிறுமியின் பெற்றோர் கூறும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது.இதுகுறித்து, போலீசார் நேற்று முன்தினம் இரவு அளித்துள்ள விளக்கம்:இந்த சம்பவம் தொடர்பாக, கடந்த 30ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அன்று மாலை, பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெற்றோர் மற்றும் மருத்துவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.கிடைத்த சாட்சியங்களின்படி, 14 வயது சிறுவன், கடந்த 1ம் தேதி கைது செய்யப்பட்டு, சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை, மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.கடந்த 1ம் தேதி சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி வரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது. போலீசார் சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டுவது குறித்து விசாரித்ததில், அத்தகவல் பொய்யானது என கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !