| ADDED : ஆக 16, 2024 10:53 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த இள்ளலுாரை சேர்ந்தவர் ரங்கராஜன், 85. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்.நேற்று காலை 11:00 மணிக்கு, திருப்போரூர் இந்தியன் வங்கியிலிருந்து, 68,000 ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். அப்போது, அவரை காண்காணித்து வந்த இரண்டு மர்ம நபர்கள், முதியவர் மீது சாயம் தெளித்து, ஆடையில் கறை ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.உடனே, அவர் அங்கிருந்த கடைக்கு சென்று, தண்ணீர் வாங்கி சட்டையை கழுவினார். இதற்கிடையில், அவர் கீழே வைத்த பணப்பை காணாமல் போனது.இதை அறிந்த முதியவர் அதிர்ச்சியடைந்து, திருப்போரூர் போலீசில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், கடையின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.அதில், இரண்டு மர்ம நபர்கள், பணப்பையை திருடியது தெரிய வந்ததையடுத்து, அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.