| ADDED : ஜூன் 03, 2024 04:46 AM
செங்கல்பட்டு, : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், தென் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.இவர்களில் பலர், வார விடுமுறையை முன்னிட்டு, கடந்த 31ம் தேதி மாலை சொந்த ஊர்களுக்கு சென்றனர்.நேற்று விடுமுறை முடிந்ததை தொடர்ந்து, மாலை சென்னை திரும்பினர். அது மட்டுமின்றி, நள்ளிரவு பரனுார் சுங்கச்சாவடி மற்றும் ஆத்துார் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வதை அறிந்த மக்கள், நள்ளிரவுக்கு முன்னதாகவே சுங்கச்சாவடிகளை கடக்க வேண்டும் என திட்டமிட்டு புறப்பட்டனர்.இதனால், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சென்னை மார்க்கத்தில் பரனுார் சுங்கச்சாவடி அருகில், வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து சென்றன.இதன் காரணமாக, பரனுார் சுங்கச்சாவடி, சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதையடுத்து, ஆறு வழிகளில் உள்ளே அனுமதிக்கப்பட்ட வாகனங்களால் ஏற்பட்ட நெரிசலை கட்டுப்படுத்த, கூடுதலாக இரண்டு வழிகளை சுங்கச்சாவடி ஊழியர்கள் ஏற்படுத்தினர்.சிங்கபெருமாள் கோவில் பகுதிகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் மறைமலை நகர் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.