| ADDED : மே 03, 2024 11:19 PM
புதுப்பட்டினம்,:கல்பாக்கம், புதுப்பட்டினத்தில், பழைய கிழக்கு கடற்கரை சாலையில், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய தடங்களில், பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.அரசுப் பேருந்துகள், இங்கு பயணியரை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன. நிறுத்தங்களில் நிழற்குடை இன்றி, திறந்தவெளியில் வெயில், மழையில், பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.ஊராட்சி நிர்வாகம் சார்பில் நிழற்குடை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டும், புதிதாக அமைக்கப்படும் நிழற்கூரை கடைகளை மறைக்கும் என கருதி, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.தற்போது, ஊராட்சி தலைவியாக உள்ள அ.தி.மு.க.,வைச் சேர்ந்த காயத்ரி, சென்னை தடத்தில், சில நாட்களுக்கு முன் தென்னங்கீற்று பந்தல் அமைத்து, நீர் மோர் வழங்கினார்.அந்த பந்தல் இதுவரை பிரிக்கப்படாத நிலையில், பயணியருக்கு நிழற்கூரையாக பயன்பட்டு வருகிறது. பயணியர் தாகம் தீர்க்க, தினசரி பானையில் குடிநீரும் வைக்கப்படுகிறது.