மதுரவாயல்:மதுரவாயல் -- தாம்பரம் புறவழிச்சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில், சட்டவிரோதமாக கழிவுநீர் வெளியேற்றும் தனியார் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை வளசரவாக்கம், மதுரவாயல், அம்பத்துார், வானகரம், அடையாளம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தனியார் கழிவுநீர் லாரிகள் வாயிலாக கழிவுநீர் அகற்றப்படுகிறது. இந்த கழிவுநீரை முறையாக பணம் செலுத்தி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விட வேண்டும்.ஆனால், சில தனியார் கழிவுநீர் லாரிகள், தேசிய நெடுஞ்சாலை துறை பராமரிப்பின் கீழ் வரும் மதுரவாயல் -- தாம்பரம் புறவழிச்சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில், சட்ட விரோதமாக வெளியேற்றுகின்றன.இந்த அத்துமீறல், பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த மழைநீர் வடிகால், கூவம் ஆற்றில் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நம் நாளிதழில், பலமுறை செய்தி வெளியாகி உள்ளது.ஆனாலும், மழைநீர் வடிகாலில் கழிவுநீர் வெளியேற்றும் தனியார் லாரிகளை, போலீசார் கண்டும் காணாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் பெண் ஒருவர், நொளம்பூர் அணுகுசாலையிலுள்ள மழைநீர் வடிகாலில், லாரி ஒன்று கழிவுநீர் வெளியேற்றுவதை வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.இதனால், மழைநீர் வடிகாலில் கழிவுநீர் வெளியேற்றும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.