திட்டமிடல் இல்லாத மழைநீர் கால்வாய் அரசு பணம் வீணாகும் அவலம்
மதுராந்தகம்:மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்கம் பணி முடிவுற்று, மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.மதுராந்தகம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் எம்.எல்.ஏ., அலுவலகம், ஆதார் சேவை மையம், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அய்யனார் கோவில் சந்திப்பு கடந்து, பெரும்பாக்கம் வழியாக உத்திரமேரூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.அந்த சாலையை 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.தேசிய நெடுஞ்சாலையின் எதிர் திசையில் பயணித்து, மதுராந்தகம் டவுன் பகுதி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு, நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.தேசிய நெடுஞ்சாலையொட்டி சாலை விரிவாக்கம் செய்ய, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்து, சாலை பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.அதில், வட்டாட்சியர் அலுவலகம் அருகே சிறிய பாலம் ஒன்றும், எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே பெரிய பாலம் ஒன்றும் அமைக்கும் பணிகள் முடிவு பெற்றதால், மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது, அந்த சாலையை ஒட்டி மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக, மண் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.மதுராந்தகம் நீதிமன்ற வளாகம், வட்டாட்சியர் அலுவலக வளாகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தின் சுற்றுச்சுவர் ஒரே நேர்க்கோட்டில் உள்ளதால், தேசிய நெடுஞ்சாலை துறையின் வாயிலாக அமைக்கப்படும் மழைநீர் கால்வாய் பணியை, சுற்றுச்சுவர் ஓரம் அமைக்க வேண்டும்.வரும் காலங்களில் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்றால், தற்போது அமைக்கப்படும் மழை நீர் கால்வாய், இடித்து அப்புறப்படுத்தப்படும்.எனவே, சுற்றுச்சுவரை ஒட்டி மழைநீர் கால்வாய் அமைக்கப்பட வேண்டும்.மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் அரசு பணிகளை, முறையாக திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.