கூடுவாஞ்சேரி: வண்டலுார் தாலுகா அலுவலகத்தில், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, வண்டலுார், ஊரப்பாக்கம், நெடுங்குன்றம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்தோர், பட்டா வேண்டி விண்ணப்பிக்கின்றனர்.விண்ணப்பத்தை ஆய்வு செய்து, கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரிகள், நேரில் இடத்தை வந்து பார்வையிட்டு, பட்டா வழங்குவதற்கு பரிந்துரை செய்தும், அவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத பெருமாட்டுநல்லுார் பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:எங்கள் இடத்திற்கு பட்டா வேண்டி விண்ணப்பம் செய்து இருந்தோம். அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் நகல்களையும் இணைத்து வழங்கியிருந்தோம்.அதை, எங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர், நேரில் வந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்.அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கின்றன. விரைவில் பட்டா வழங்கி விடுவோம் என தெரிவித்தனர். இது தொடர்பாக, தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்கிறோம்.இதுவரை பட்டா கிடைக்கவில்லை. இது குறித்து, வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பட்டா வழங்குவது தொடர்பாக, விண்ணப்பங்களை கோட்டாட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.அவர் தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் தாம்பரம் சென்று, கோட்டாட்சியரை பாருங்கள் என, அலைக்கழிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தோருக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா கூறியதாவது:எங்கள் வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டா கேட்டு வந்துள்ள விண்ணப்பங்களின் ஆவணங்களை பரிசோதனை செய்து, அவர்களுக்கு பட்டா வழங்கியுள்ளோம்.சில விண்ணப்பங்கள் குறித்து, கோட்டாட்சியர் தான் முடிவு செய்ய வேண்டும். எனவே, அவர்களுக்கு பரிந்துரை கடிதத்துடன், விண்ணப்பதாரரின் விண்ணப்பத்தையும் சேர்த்து அனுப்பி வைத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.