செய்யூர்:செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்குட்பட்ட லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியத்தில் 84 ஊராட்சிகள் உள்ளன.இங்கு, 30,000 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. விவசாயமே இப்பகுதி வாசிகளின் பிரதான தொழிலாக உள்ளது. மேலும், வீடுகளில் நாட்டுக் கோழி வளர்ப்பில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.கோடைக்காலம் துவங்கி பகல் நேரத்தில், வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், இரவு நேரத்திலும் வெப்பமான காற்று வீசுகிறது. தற்போது, நிலவும் அதிக வெப்பநிலை, கோழிகளில் வெப்ப அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.வெப்பநிலை, 35 டிகிரி செல்சியசுக்கு மேல் செல்லும்போது, பறவைகள் வெப்ப அழுத்தத்துக்கு ஆளாகின்றன.கோழிகளின் நாக்கு உலர்ந்து, நரம்பு மண்டலம் மற்றும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, இதய துடிப்பு அதிகரித்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டு, திடீரென கோழிகள் உயிரிழக்க நேரிடும்.மேலும், கோடைக்காலத்தில் பெய்யும் திடீர் மழையால் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் காரணமாக, கோழிகள் உயிரிழக்க நேரிடும்.கோடை வெயிலில் இருந்து கோழிகளை பாதுகாப்பது குறித்து, நெடுமரம் கால்நடை மருத்துவர் தமிழ் கூறியதாவது:கோடைக்காலத்தில் கோழிகளுக்கு குறைந்த தீவனம், அதிக தண்ணீர் வழங்க வேண்டும். காலை 6:00 - 7:30 மணிக்குள் அல்லது இரவு சூரிய அஸ்தமனத்திற்கு பின் கோழிகளுக்கு உணவு அளிக்க வேண்டும்.கொட்டகையில் ஓலைகள் கொண்டு கூரை அமைக்க வேண்டும். தண்ணீரில் எலக்ட்ரோலைட்டுகள், வைட்டமின் சி, பி, இ, ஆஸ்பிரின் போன்ற நீர் சேர்க்கைகள் பயன்படுத்த வேண்டும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தடுப்பூசி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். கால்சியம், சோடியம் போன்ற நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்து வாயிலாக உணவு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.