மறைமலை நகர் : சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் பாரேரி, திருத்தேரி, விஞ்சியம்பாக்கம், சத்யா நகர், பகத்சிங் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.இவற்றில், 20,000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, தென் மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்கி, ஒரகடம், மறைமலை நகர், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.இப்பகுதிவாசிகளின் குடிநீர் தேவைக்காக, ஆழ்துளை கிணறு மற்றும் பொது கிணறு அமைக்கப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வாயிலாக, தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.அதேபோல், திருத்தேரி ஏரியில் உள்ள கிணற்றில் இருந்து, பைப் லைன் வாயிலாக, திருத்தேரி பகுதிக்கு குடிநீர் செல்கிறது.அங்கு, ஜி.எஸ்.டி., சாலையோரம் செல்லும் 'பைப் லைன்' உடைந்து, தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால், குழாய்களில் தண்ணீர் வேகம் குறைந்து, குறைவாக வருவதாக அப்பகுதிவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுத்து, பைப் லைன்களை சரி செய்ய வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.