கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, நான்காவது வார்டுக்கு உட்பட்ட விஸ்வநாதபுரம், வீரபாகு நகர் பிரதான சாலையில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதிக்கு, நகராட்சி சார்பில், குழாய் இணைப்புகள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. பராமரிப்பு பணி காரணமாக, பல மாதங்களாக இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.இருப்பினும், நகராட்சி சார்பில், டிராக்டர் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வரும் அந்த குடிநீரை, பணிக்கு செல்வோர் மற்றும் வீட்டில் இருக்கும் முதியோர் பிடித்து பயன்படுத்த இயலவில்லை.இதனால் அப்பகுதிவாசிகள் குடிநீருக்காக சிரமம் அடைந்து வருகின்றனர்.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:விஸ்வநாதபுரம், வீரபாகு நகர் பிரதான சாலை மற்றும் ஐ.ஜி.எம்., சர்ச் தெரு உள்ளிட்ட பகுதிகளில், சில மாதங்களாக குடிநீர் வரவில்லை. பராமரிப்பு பணிக்காக, ஏற்கனவே இருந்த குடிநீர் குழாய் இணைப்புகள் அகற்றப்பட்டு பல மாதங்கள் ஆகியும், இதுவரை புதிய குழாய் இணைப்புகள் அமைக்கவில்லை.மேலும், தெருமுனையில் குடிநீர் தொட்டி அமைத்து, அதன் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், அதில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார் பழுது காரணமாக, அதிலிருந்தும் குடிநீர் பெறமுடியாத நிலை உள்ளது.எனவே, மின் மோட்டார் பழுதை நீக்கி, குடிநீர் தொட்டி வாயிலாக குடிநீர் வழங்கக்கோரி, நகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் தெரிவித்தோம். ஆனால், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, எங்கள் பகுதிக்கு, குடிநீர் குழாய் இணைப்புகளை விரைவில் சீரமைத்தும், பழுதான மின் மோட்டாரை பழுது நீக்கியும், சீராக குடிநீர் வழங்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.