| ADDED : ஜூன் 30, 2024 10:51 PM
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதிகள் பெருகும் சூழலில், அவற்றின் ஊழியர்கள் தேவையும் அதிகரிக்கிறது. இதையடுத்து சுற்றுலா சேவை சார்ந்து, மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு, சேவை பணியாளர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க, இந்திய சுற்றுலாத்துறை முடிவெடுத்தது.முதல்கட்டமாக, ஒரு பிரிவிற்கு 45 பேர் வீதம், நான்கு பிரிவுகளாக, 180 பேருக்கு ஆறு நாட்கள் பயிற்சியளிக்கப்பட்டது.சென்னை, உணவக மேலாண்மை, சமையற்கலை மற்றும் ஊட்டநெறி தொழில்நுட்ப பயிலக பேராசிரியர் ரூபன், நட்சத்திர விடுதிகளில் பரிமாறுவோர் பயிற்சியை, ஆறு நாட்கள் அளித்தார்.சுற்றுலா வளர்ச்சி, விருந்தோம்பல் துறை முன்னேற்றம் குறித்து அறிந்து, நட்சத்திர விடுதிகளில் பயணியர் உபசரிப்பு, பரிமாறுவோர் சுகாதார துாய்மையுடன் இருப்பது உள்ளிட்ட பயிற்சிகளை பெற்றனர்.தனியார் ரிசார்ட்டைச் சேர்ந்த கார்த்திக், பயிற்சி செயல் விளக்க முறைகளை சோதித்து பாராட்டினார். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.ஊக்கத்தொகையாக தலா 1,800 ரூபாய், வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.