குடிசைக்கு தீ வைத்த வாலிபரிடம் விசாரணை
மாமல்லபுரம், மாமல்லபுரத்தில், தகராறு காரணமாக, குடிசைக்கு தீ வைக்கப்பட்டது.மாமல்லபுரம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் கண்ணன், 62. குடிசை வீட்டில், தாய் மாணிக்கம்மாள், 80, என்பவருடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1:15 மணியளவில், குடிசையில் இருவரும் உறங்கினர்.அப்போது, குடிசையில் ஏதோ கருகுவது போல உணர்ந்து, கண்ணன் விழித்து பார்த்துள்ளார். அப்போ, கூரை தீப்பற்றி எரியத் துவங்கியதால், தாயுடன் வெளியேறினார்.அதற்குள், தீ குடிசை முழுதும் பரவியது. அக்கம்பக்கத்தினர், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். தகவலின்படி வந்த மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர்.இதில், குடிசையில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின.இதுகுறித்து, அருகிலுள்ள வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது, அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், குடிசைக்கு தீ வைத்தது தெரிந்தது.இதுகுறித்த புகாரின்படி, அந்த வாலிபரை பிடித்து, மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.