பழுதாகி நின்ற லாரியால் 2 மணி நேரம் நெரிசல்
பெருங்களத்துார்:பழுதாகி நின்ற கல் குவாரி லாரியால், பெருங்களத்துாரில் இரண்டு மணி நேரம் நெரிசல் ஏற்பட்டது. வண்டலுார் அடுத்த கண்டிகையில் உள்ள கல் குவாரியில் ஜல்லிக்கற்களை ஏற்றிய லாரி, நேற்று காலை ஜி.எஸ்.டி., சாலை வழியாக திருநீர்மலை பகுதிக்கு சென்றுகொண்டிருந்தது. தாம்பரம் அடுத்த இரும்புலியூர் மேம்பாலம் அருகே, லாரி பழுதாகி நின்றதால், ஜி.எஸ்.டி., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை நேரத்தில், வாகன எண்ணிக்கை அதிகளவில் இருந்ததால், வண்டலுாரில் இருந்து பெருங்களத்துார் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து சென்றன. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். பின், 'கிரேன்' இயந்திரம் வரவழைக்கப்பட்டு, பழுதாகி நின்ற லாரியை அப்புறப்படுத்தினர். இதனால், ஜி.எஸ்.டி., சாலையில் இரண்டு மணி நேரம் நெரிசல் ஏற்பட்டது.