உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 24 குழந்தைகள் மைய கட்டடங்கள் பராமரிப்பு வாரியம், மாநகராட்சி இடையே பனிப்போர்

24 குழந்தைகள் மைய கட்டடங்கள் பராமரிப்பு வாரியம், மாநகராட்சி இடையே பனிப்போர்

சென்னை : ஓ.எம்.ஆர்., ஒக்கியம் துரைப்பாக்கம் அருகே, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 1998ம் ஆண்டு முதல் குடியிருப்பு கட்டப்பட்டது.மொத்தம், 23,704 வீடுகள் உள்ளன. இதில், 196வது வார்டுக்கு உட்பட்ட கண்ணகி நகரில், 15,656 வீடுகள் உள்ளன. இதில், 19 குழந்தைகள் மையங்கள் செயல்படுகின்றன.அதேபோல், 195வது வார்டுக்கு உட்பட்ட, எழில் நகர் மற்றும் சுனாமி நகரில், 8,048 வீடுகள் உள்ளன. இங்கு, ஐந்து குழந்தைகள் மையங்கள் செயல்படுகின்றன.சாலை, பூங்கா, குழந்தைகள் மையங்கள் உள்ளிட்டவை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்து பராமரிக்கப்படுகிறது.இதன்படி, 14 குழந்தைகள் மையங்கள், 2004, ஆக., மாதம், அப்போதிருந்த ஒக்கியம் துரைப்பாக்கம் ஊராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டன. பின், 2014ல், 10 குழந்தைகள் மையங்கள் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டன.இதில், பல மையங்கள் வாரியம் கட்டி கொடுத்தது. சில மையங்களை, தொண்டு நிறுவனங்கள் கட்டி கொடுத்தன. ஆனால், 24 மையங்களையும் பராமரிப்பது யார் என்ற கேள்வி, மாநகராட்சி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை இடையே ஏற்பட்டுள்ளது. இதனால், பல ஆண்டுகளாக குழந்தைகள் மையங்கள் பராமரிப்பு இல்லாமல் செயல்படுகிறது. சில மையங்களின் சுவரில் விரிசல் விழுந்து, தரை பழுதடைந்துள்ளது. இதனால், பாடம் நடத்தவும், சமையல் செய்யவும் சிரமப்படுகின்றனர். அனைத்து மைய கட்டடங்களையும் பராமரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, பகுதிமக்கள் கூறியதாவது:குழந்தைகள் பாதுகாப்பு கருதி, அனைத்து மைய கட்டடங்களையும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை அதிகாரிகள் தான் கண்காணிக்க வேண்டும். மாநகராட்சி சீரமைப்பதையும் உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், இரு துறைகளும் அலட்சியமாக இருக்கின்றனர். அசம்பாவிதம் நடந்து, உயிர் பலி ஏற்பட்டால் தான் சீரமைப்பு செய்வரா என்ற கேள்வி எழுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.குழந்தைகள் வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறுகையில், 'இதுவரை, சாதாரண பராமரிப்பு தான் தேவைப்பட்டது. அதை, வாரியம், தொண்டு நிறுவனங்கள் வாயிலாக செய்து வந்தோம்.தற்போது, சில கட்டடங்கள் வலுவிழந்து உள்ளது. இதை சீரமைப்பது குறித்து, உயரதிகாரிகளிடம் பேசி உள்ளோம். விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை