செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு, 2.44 லட்சம் கிலோ விதை நெல் தயாராக உள்ளது. வேளாண்மை அலுவலகங்களில் விவசாயிகள், தங்கள் நில விபரம், ஆதார் கார்டை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில், எட்டு தாலுகாக்களில், 1.65 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. மாவட்டத்தில் சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பட்டங்களிலும், நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கான நெல் விதைகள், தனியார் மூலமாக அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசுகள், வேளாண்மைத் துறையின் மூலமாக, 50 சதவீத மானிய விலையில் நெல் விதைகள் விற்பனை செய்கின்றன. தற்போது, வடகிழக்கு பருவ மழை துவங்கி, ஏரிகள் நிரம்பி வருகின்றன. ஏரி தண்ணீர் மூலமாக நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பணிகளை துவக்காமல் உள்ளனர். ஆனால் கிணறு, ஆழ்துளை கிணறு மூலமாக நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், நாற்றங்கால் அமைத்து விவசாய பணியை துவக்கி உள்ளனர். வேளாண்மைத் துறையிடம் இதுவரை, 3.25 லட்சம் கிலோ நெல் விதையை வாங்கி, விவசாயிகள் பயன்படுத்தி உள்ளனர். இதுமட்டும் இன்றி தற்போது, பொன்னி நெல் விதை உள்ளிட்ட அனைத்து வகை நெல் விதைகள், 2.44 லட்சம் கிலோ நெல் விதைகள், வேளாண்மைத்துறை அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. இதைப் பெற விவசாயிகள், தங்கள் விவசாய நிலத்தின் ஆவணம், ஆதார் கார்டு ஆகியவற்றை, வட்டார வேளாண்மைத் துறை அலுவலகங்களுக்கு, விவசாயிகள் சென்று பெற்றுக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு வேளாண்மைத்துறை அலுவலர்களை சந்தித்து, விவசாயிகள் தகவல்கள் பெற்றுக் கொள்ளலாம். பொன்னி நெல் விதை ஒரு கிலோ 52 ரூபாயும், மற்ற விதை நெல் 43 ரூபாய் முதல் 45 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. வேளாண்மைத் துறையில் விற்பனை செய்வதை விட அதிகமான விலைக்கு, தனியார் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. வேளாண்மைத் துறை மூலமாக விற்பனை செய்யப்படும் விதைகள் தரமாக இருக்கும். இந்த விதைகளை விவசாயிகள் வாங்கி பயன் பெறலாம் என, வேளாண்மைத் துறையினர் தெரிவித்து உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், வட்டார வேளாண்மை அலுவலகங்களில், சம்பா பருவத்திற்கு தேவையான நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. விவசாயிகள் தங்களது நில விபரங்கள், ஆதார் எண் போன்றவற்றை அலுவலர்களிடம் வழங்கி, விதை நெல் பெற்றுக் கொள்ளலாம். - பா.பிரேம்சாந்தி, வேளாண்மை இணை இயக்குநர், செங்கல்பட்டு. வேளாண்மை அலுவலகங்களில் விதை நெல் இருப்பு விபரம் வட்டாரம் விதை நெல் (கிலோ) அச்சிறுபாக்கம் 28,997 மதுராந்தகம் 8,118 சித்தாமூர் 4,267 பவுஞ்சூர் 2,634 திருக்கழுக்குன்றம் 2,419 திருப்போரூர் 217 காட்டாங்கொளத்துார் 1,988 சிட்டலப்பாக்கம் ----- மொத்தம் 2,44,937