திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் நேற்று ஒரே நாளில் 73 திருமணங்கள்
திருப்போரூர், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நேற்று ஒரே நாளில் 73 திருமணங்கள் நடந்தன. திருப்போரூரில், அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மறறும் ஹிந்து பண்டிகை நாட்களில், சிறப்பு வழிபாடு நடக்கிறது. இது தவிர, கந்தசஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம் ,வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன. இக்கோவிலில், திருமணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று சுபமுகூர்த்த நாள் என்பதால், கோவிலில் திருமணம் செய்ய 73 பேர் முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் கோவில் பிரகாரம் , உற்சவர் மண்டபம், வட்ட மண்டபம் உள்ளிட்ட இடங்களில் திருமணம் செய்தனர். மேலும், முன்பதிவு செய்யாத பலரும் திருமணம் செய்ய வந்திருந்தனர். இதனால், கோவில் வளாகப்பகுதிகள், மாட வீதிகளில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். திருமணத்திற்கு வந்தவர்கள் பலரும் தங்களது வாகனங்களை, கோவிலை சுற்றி உள்ள நான்கு மாடவீதிகளில் நிறுத்தி விட்டு சென்றனர். அதேபோல், மாடவீதிகளில் கட்டப்பட்டுள்ள சில திருமண மண்டபங்களில் போதிய வாகன நிறுத்துமிட வசதி இல்லாததால் வாகனங்களை சாலையோரம் நிறுத்தினர். இதன் காரணமாக, ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் நான்கு மாடவீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.