உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருப்போர் 8,058 பேர்!: அரசு நலத்திட்டங்களை பெற முடியாமல் பாதிப்பு

 ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருப்போர் 8,058 பேர்!: அரசு நலத்திட்டங்களை பெற முடியாமல் பாதிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், புதிய ரேஷன் கார்டு கோரி, 8,058 பேர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இதனால், ஜாதி சான்றிதழ், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.இப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் வாயிலாக, தற்போது ரேஷன் கார்டு நடைமுறையில் உள்ளவர்களுக்கு, அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.அரசின் நலத்திட்டங்கள், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெற, ரேஷன் கார்டு முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது.மாவட்டத்தில், சில மாதங்களுக்கு முன், புதிய ரேஷன் கார்டு கேட்டு, 10,000த்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.இந்த விண்ணப்பங்களை, வட்ட வழங்கல் அலுவலர்கள் ஆய்வு செய்து, 8,058 பேர் தகுதியானவர்கள் என, மாவட்ட வழங்கல் அலுவலருக்கு பரிந்துரை செய்தனர். அதன்பின், தகுதியான புதிய ரேஷன் கார்டுகள் வழங்க, அரசுக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் பரிந்துரை செய்தார்.ஆனால், மகளிர் உரிமை தொகை திட்டம் காரணமாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.புதிய ரேஷன் கார்டு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், ஜாதி, இருப்பிடம், வருமானச்சான்று மற்றும் அரசு சலுகைகள் பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.மத்திய மற்றும் மாநில அரசுகளின் மருத்துவ காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. ஏழைகள் உயர் சிகிச்சைகள் பெறுவதற்கு, அரசின் காப்பீடு திட்டம் கைகொடுத்து வருகிறது.ரேஷன் கார்டுதான் இதற்கு பிரதான ஆவணம் என்பதால், ஏழைகள் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைய முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.எனவே, புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.மாவட்டத்தில், புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தவர்களில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது தொடர்பான அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அரசின் உத்தரவு வந்த உடன், தகுதியான அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்கும் பணி துவங்கப்படும்.- மாவட்ட வழங்கல் அலுவலர்கள்,செங்கல்பட்டு.

தாலுகா வாரியாக ரேஷன் கார்டுக்கு காத்திருப்போர்

செங்கல்பட்டு 1,900மதுராந்தகம் 996செய்யூர் 793திருக்கழுக்குன்றம் 852திருப்போரூர் 1,128வண்டலுார் 2,389மொத்தம் 8,058


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி