உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 2 வயது குழந்தைக்கு தண்டுவட புற்றுநோய் கட்டியை அகற்றி அரசு மருத்துவமனை சாதனை

2 வயது குழந்தைக்கு தண்டுவட புற்றுநோய் கட்டியை அகற்றி அரசு மருத்துவமனை சாதனை

செங்கல்பட்டு:காஞ்சிபுரம் மாவட்டம், வளத்துார் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் - இன்பகனி தம்பதியரின் மகன் ஜான்ஆஸ்டின், 2. குழந்தைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி, திடீரென கால்கள் முற்றிலுமாக நடக்க முடியாமல் செயலிழந்தன. அதனால், இடுப்பு பகுதியில் உணர்ச்சி இல்லாமல் போனது. அதன்பின், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, குழந்தைகள் நலப்பிரிவில், உள்நோயாளியாக குழந்தையை சிகிச்சைக்கு சேர்த்தனர்.ரவிக்குமார் தலைமையிலான மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்தபோது, முதுகு தண்டுவட பகுதியில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவந்தது. இதனால், அறுவை சிகிச்சை செய்ய, டாக்டர் குழுவினர் முடிவு செய்தனர்.நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மருத்துவமனை முதல்வர் ஜோதிகுமார் ஆலோசனைப்படி, நிலைய மருத்துவ அதிகாரி முகுந்தன் மற்றும் மயக்கவியல் துறை பேராசிரியர் பத்மநாபன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், குழந்தைக்கு முதுகு தண்டுவட பகுதியில் உள்ள கட்டியை, அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றினர்.அதன்பின், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து, குழந்தையை நேற்று முன்தினம் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து, நரம்பியல் துறை டாக்டர்கள் கூறியதாவது:முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், குழந்தைக்கு சிகிச்சை நுண்ணோக்கி மற்றும் சி.ஆர்.எம்., இயந்திரம் உதவியுடன், கட்டியை கண்டறிந்து, அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றப்பட்டது.தற்போது, குழந்தை உட்காரவும், நிற்கவும் முடிகிறது. உணர்ச்சியை அறிய முடிகிறது. இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால், 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை