சாலையோரம் பயமுறுத்தும் மரம் வாகன ஓட்டிகள் அச்சம்
மறைமலை நகர்:சிங்கப்பெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் சாலை 9 கி.மீ., நீளம் உடையது. இந்த சாலை திருப்போரூர் - செங்கல்பட்டு இணைப்பு சாலையாகும். இந்த பகுதியை சுற்றியுள்ள கொண்டமங்கலம், தர்காஸ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் இந்த சாலையை பயன்படுத்தி செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.தென்மேல்பாக்கம் - கொண்டமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சாலையில் இருபுறமும் 1 கி. மீ., வரை காப்பு காடுகள் உள்ளன. இந்த பகுதியில் சாலை ஓரம் 20 அடி உயர தைலமரம் ஒன்று காய்ந்த நிலையில் சாய்ந்து உள்ளது. பலத்த காற்று வீசினால் ,அந்த பகுதியை வாகன ஓட்டிகள் கடக்கும் போது மரம் முறிந்து மேல விழுமோ என்ற அச்ச உணர்வுடன் செல்வதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். விபத்து ஏதும் ஏற்படும் முன், காய்ந்த மரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.