பூட்டிக்கிடக்கும் வணிக வளாகம் பாக்கம் ஊராட்சியில் வீண்
மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாக்கம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தை, பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்டது, பாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சியில், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரம், வள்ளலார் திருமண மண்டபம் அருகே, கனிம வள நிதி திட்டத்தின் கீழ், 2013 -- 14ல், ஊராட்சிக்கு வருவாய் ஈட்டும் வகையில், ஐந்து கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டது. இந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகள், இதுவரை பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல், கடந்த 20 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டு உள்ளன. அருகே உள்ள ஆலமரத்தின் விழுதுகள் இந்த கட்டடத்தில் படர்ந்து, கட்டடம் பலவீனமாகி வருகிறது. மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இந்த கட்டடத்தை ஆய்வு செய்து, ஊராட்சிக்கு வருவாய் ஈட்டும் வகையில், கடைகளை பொது ஏலம் விட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.