பயன்பாடற்ற நியாய விலை கடை கட்டடத்தால் விபத்து அபாயம்
அச்சிறுபாக்கம்,:நியாய விலைக் கட்டடம் சேதமடைந்து, பயன்பாடின்றி உள்ளதால், அதை இடித்து அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.அச்சிறுபாக்கம் அருகே ஒரத்தி ஊராட்சியில், சமுதாய நலக்கூடம் அருகே, 25 ஆண்டுகளுக்கு முன், வடமணிப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் வாயிலாக, நியாய விலை கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது.300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், இந்த கடையை பயன்படுத்தி வந்தனர்.கட்டடம் பழமையானதால் விரிசல்கள் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.அதனால், பழைய போலீஸ் ஸ்டேஷன் பகுதியில், புதிதாக நியாய விலை கடைக்கு கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.தற்போது, பயன்பாடின்றி உள்ள பழைய கட்டடத்தின் பின்புற சுவர் இடிந்துள்ளது.இதனால், இந்த கட்டடம் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் இங்கு நடக்கின்றன.பள்ளிக்கூடம் அருகே இந்த பழைய கட்டடம் உள்ளதால், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.